தனது செல்லில் விளையாடிக்கொண்டே இருந்த ராம் , தன்னை அறியாதவாறு உறங்கிப் போனான். அடுத்த நாள் காலை பதினோரு மணி வாக்கில், அவனது செல்போன் அலறியது. பதறி அடித்து விழித்தெழுந்து , போன் டிஸ்ப்ளேயைப் பார்க்க அவனது அக்கா கீர்த்தியிடம் இருந்து கால். உடனே காலை பிக்கப் செய்து காதில் வைத்தவாறே, "ஹலோ" என்று சிறிது சலித்துக் கொண்டே சொன்னான்.மறுமுனையில் , " மாமா , அர்ஜுன் பேசுறேன் மாமா " என்று தனது ஐந்து வயது மழலைக் குரலில் ஆர்வத்துடன் பேசினான் அர்ஜுன்.அர்ஜுனின் குரலைக் கேட்ட உடனே ராமிடம் இவ்வளவு நேரம் இருந்த சலிப்பு மாறி, " ஹாய் டா, அர்ஜுன் குட்டி.. எப்படி இருக்கடா செல்லம் !!! " என்று ராமின் குரலின் தொனியும் சிறு பிள்ளை போலவே மாறிற்று. "நான் உன்கூடடூ போ" என்று கோவப்பட்டுக்கொண்டே சொன்னான். "என்னடா ஆச்சு அர்ஜுன். மாமா மேல எதுக்கு கோவம் ?? " , என்று ராம் குழம்ப " நான் உங்ககிட்ட பேசணும்னு காலையில எட்டு மணிக்குலாம் எந்திரிச்சு சமத்தா பல் தேய்ச்சு குளிச்சு உங்களுக்கு போன் பண்ணினா, நீங்க இவ்வளவு நேரம் குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்திருக்கீங்க .. சோம்பேறி மாமா" , என்று அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சுஜி அர்ஜுனிடம் இருந்த போனை பிடுங்கி, "மாமா அர்ஜுன் பொய் சொல்றான். அவன் பல்லு தேய்க்கவே இல்ல. பல்லு தேய்க்காமவே " என்று சொல்ல , மறுபடியும் அர்ஜுன் சுஜியிடம் இருந்து செல்லை பிடுங்கி , " இல்ல மாமா . அவ தான் இன்னும் குளிக்கவே இல்ல" என்று மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். சிறிது காலமாக சிரிப்பு என்பதையே மறந்து போய் இருந்த ராமும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் , "ஹா ஹா ஹா.. ஹி ஹி ஹி.. " என்று தன்னை அறியாமலே சிரித்துக் கொண்டும் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் அளித்துக்கொண்டும், நேரம் போவது தெரியாமலே பேசிக்கொண்டிருந்தான். இதே போல் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக பேசிய பின்பு, திடீரென்று அவனது அக்கா , குழந்தைகளிடம் இருந்து போனை பிடுங்கி " மாமனும் மருமக்களும் பேசினா நேரம் போறதே தெரியாதே", என்று சொல்ல , இவ்வளவு நேரம் குதூகலத்துடன் பேசிக்கொண்டு இருந்த ராம் , இப்பொழுது சற்றே அமைதியான் குரலில் " என்ன " என்று மட்டும் கேட்டான்." எப்படிடா இருக்க ராம் ?? ஏன்டா வாரத்துல ஒரு போன் கால் கூட பண்ண மாட்டியா நீ ", என்று அவனை திட்டும் சாயலில் பேசினால் கீர்த்தி. " ஏன் நீ எனக்கு கால் பண்ணலாம்ல " என்று சற்றே ஏகத்தாளமாக கேட்டான் ராம். "ஆமாம். நான் கால் பண்ணிட்டாலும் உடனே கால எடுத்துடுவீங்க ஐயா.. " என்று பதிலும் நக்கலாகவே வந்தது. பின்பு , "அதை விடு ராம். நீ எப்ப பொங்கலுக்கு ஊருக்கு வர ?? டிக்கெட்லாம் புக் பண்ணிட்டியா" , என்று கேட்டாள். "பொ பொ.. பொங்கலுக்கா !!!! " என்று இழுத்தவனிடம் , " டேய் என்ன பொங்கலுக்கானு இழுக்குற ?? அப்படின நீ டிக்கெட்லாம் புக் பண்ணலையா ?? பொங்கலுக்கு நீ ஊருக்கு வருவ தானே?? எத்தன நாள் லீவ் உனக்கு " என்று அடுக்கடுக்கான கேள்விக்கனைகளை தொடுத்தாள் ராமின் அக்கா. " வருவேன்.. வருவேன்.. இன்னும் டிக்கெட்லாம் புக் பண்ணல. ஆனால் நான் வந்துடுவேன். போகி அன்னிக்கு காலையில,திருநெல்வேலிக்கு வந்து, அப்பா அம்மாவையும் அழைச்சுக்கிட்டு , சாயங்காலம் உங்க வீட்டுக்கு வந்துடுவேன். மறுபடியும் மாட்டு பொங்கல் அன்று சாயங்காலம் ஊருக்கு கிளம்பிடுவேன்" என்று தான் டூர் பிளான் எல்லாவற்றையும் அவளிடம் ஒப்படைத்தான் ராம். " என்னடா உடனே கிளம்புறேன்னு சொல்லுற. ஒரு வாரம் லீவ் இருக்கும் தானே" என்று கேட்டு விட்டு , உடனேயே சுதாரித்துக் கொண்டு " உனக்கு கர்நாடகா ஸ்டேட்ல ரெண்டு நாள் தான் லீவோ .. அதனால என்ன நீ சும்மா ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வரலம்லா ?? " என்று கேட்டாள்.
No comments:
Post a Comment