Saturday, 5 April 2014

சுகன்யா 12

செல்வாவும், அவன் ஃப்ரெண்ட் சீனுவும் தெருவோரக்கடையில் காஃபி குடித்து கொண்டிருந்தார்கள். சீனுவின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.  "மாப்ளே, கொஞ்சம் தள்ளி நின்னு புடிடா...தலை சுத்துது." செல்வா அவனை விட்டு தள்ளி நின்றான். "சரிடா...மச்சான்...ஃபிகரை இன்னும் கரெக்ட் பண்ணி முடிக்கல, அதுக்குள்ள உன் பக்கத்துல நின்னு நாங்க சிகரெட் பிடிக்ககூடாதா" சீனு அவனை கலாய்த்தான்.  "நீ நினைக்கற மாதிரி இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடா" செல்வா முகத்தை சுளித்துக்கொண்டான்.  செல்வா, போன வாரம் தான் அவனிடம் சுகன்யாவின்பால் தனக்கேற்பட்டிருந்த மயக்கத்தை சீனுவிடம் சொல்லியிருந்தான். இவனிடம் சுகன்யாவை பற்றி சொல்லி இருக்க கூடாதோ? இவன் ஒரு உளறுவாயனாச்சே... ஆனால் அவன் கிண்டல் அவனுக்கு இனிக்கவும் செய்தது...எரிச்சலையும் தந்தது. காதல் வயப்பட்டவன் தன் காதலை தன் மனதுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் கடினம்.  "என்ன நண்பா, சொல்லிட்டியா....அவ கிட்ட உன் காதலை...எவ்வள நாளைக்கு இப்படி மனசுக்குள்ளயே வெச்சிட்டிருப்பே? அவ உன் ஆபீசுக்கு வந்து மூனு மாசம் ஆச்சுங்கற...பொண்ணு வேற...சூப்பரா இருப்பாங்கறே...எவனாவது தண்டுல மச்சம் இருக்கற ஒரு குடுமி நடுவுல வந்து அடிச்சுட்டு போயிடப் போறான்" சீனு அவன் விலாவில் குத்தி உரக்க சிரித்தான். "டேய்...சும்மா இருடா... எங்க ஆபீசுல நான் ஒருத்தன்தான் கல்யாணம் ஆகாதவண்டா...நேத்து கூடகேண்டீன்ல்ல தனியா டீ ப்ரேக்ல இருந்தா...சொல்லலாம்னு போனேன்; எனக்கு தைரியம் வரல்ல, அவதாண்டா எனக்கு டீ வாங்கி கொடுத்தா... அவ மாட்டேன்னு சொல்லிட்டான்னா; அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேண்டா...அவன் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.  "என்னடா நீ ஒரு மொக்கை பீஸ் மாதிரி பேசற, குடுமி வெச்சவன் உன் ஆபீசுல இருந்துதான் வரணுமா", நேர்ல சொல்ல தைரியம் இல்லன்னா...SMS அனுப்பிடேன்...அவ நம்பர் வெச்சிருக்கியா... இல்லயா?... இந்த காலத்துல பொண்ணுங்கள்ளாம் டகால்டியா இருக்காளுங்க, ரெண்டு சிம் வெச்சிருக்காளுங்க....வீட்டுல இருக்கறவங்களுக்கு ஒன்னு... பாய் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஒன்னு....பேஸ் புக்ல இருக்காளா இல்லயா...அவ photo உன் கிட்ட இருக்கா, இருந்தா காட்டு மச்சான்... நான் உங்கூட போட்டிக்கு ஒன்னும் வரமாட்டேன்...வரப்போற அண்ணி எப்படி இருக்கான்னு பார்க்கிறேன்." சீனு அவனை சீண்டினான்.  "டேய்...கொஞ்சம் பொத்துடா...நேர்ல சொல்லறது, மெசேஜ் அனுப்பறது, ரெண்டும் ஒன்னுதாண்டா...இப்பவாது அப்ப அப்ப, அவ என் கிட்ட சிரிச்சு பேசிகிட்டாவது இருக்கா...கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும்டா...இப்ப அவளுக்கும் என் மேல ஒரு கிக் இருக்குன்ற நம்பிக்கையாவது எனக்கு இருக்கு" செல்வா அழுதுவிடுவான் போலிருந்தது.  இந்த காலத்திலும், இளைஞர்கள் தைரியமாக தங்கள் முதல் காதலை, தாங்கள் காதலிக்கும் பெண்ணிடம் சொல்லுவதற்கு தயங்குகிறார்கள்... அவள் மறுத்துவிட்டால் என்ன ஆவது, இந்த பயத்திலேயே, நேருக்கு நேர் தங்கள் மனதை திறந்து காட்ட அவர்களால் முடியவில்லை. செல்வாவின் சுபாவமே தனி...அவன். நத்தை தன் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்வது போல், தனக்கென ஒரு உலகத்தில் இருப்பவன். கூட்டத்தை கண்டாலே தனியாக ஒதுங்கி விடுவான். உண்மையிலேயே அவனுக்கு இது முதல் காதல்.  "photo இருக்கு, பாக்கிறியா...சீனு...அவ ரொம்பா அழகா இருக்காடா...அதாண்டா எனக்கு பயமா இருக்கு" அவன் தன் பர்ஸிலிருந்து சுகன்யாவின் புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்.  "மச்சி... நீ சொல்லறது சரிதான், "ஏ" க்ளாஸ்டா மச்சான்...இவ உனக்கு கிடைச்சா, அது ஜாக்பாட் அடிச்ச மாதிரிதாண்டா.. போட்டோவை எங்கிருந்துடா சுட்ட?" சீனுவின் முகம் மாறியிருந்தது.  "ஆபீஸ்ல, ஒரு நாள் சர்வீஸ் புக்கெல்லாம் தயார் பண்ணும் போது சுகன்யா கொண்டு வந்த போட்டோ ஸ்பேர் ஒன்னு இருந்தது, அதை அவளுக்கு தெரியாம நான் எடுத்து வெச்சுக்கிட்டேன்" செல்வா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான்.  "ம்ம்ம்...முதல்ல அவ போட்டோவை திருடின....அப்புறம் அவளுடைய மனசையும் திருடப் பாக்கற...அவளை உன் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்னு சொல்லற, நீ என்ன வேணா சொல்லு; எப்ப வேணா சொல்லு; ஆனா சீக்கிரமா உன் மனசுல இருக்கறதை சொல்லிடு; அவ்வளதான் நான் சொல்லுவேன்.. எனக்கு வேலை இருக்கு, பாக்கலாம்...அப்புறம் கால் பண்ணுடா... நான் கிளம்பறேன்." சீனு தன் பல்சரை உதைத்து கிளம்பினான்.  சீனு அவனுடைய பால்ய சினேகிதன். உனக்கு நான் நண்பேண்டா...அப்படின்னு, செல்வாவுக்குன்னு இருக்கிறவன், இவன் ஒருத்தன்தான். செல்வா தன் தலை முடியை கோதிக்கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தான்.  செல்வாவின் செல் சிணுங்க ஆரம்பித்தது; இப்ப தான் போனான்...அதுக்குள்ள கால் பண்ணி உயிரெடுக்கிறான்...அவன் முனுமுனுத்துக்கொண்டே, செல்லை எடுத்துப் பார்த்தான். புது நம்பராக இருந்தது. "ஹல்லோ, பெண் குரல் ஒலித்தது" செல்வாவுக்கு யாரென்று தெரியவில்லை. "ம்ம்...நான் செல்வாதான் பேசறேன்...நீங்க யாரு?" "நா..நான்...சுகன்யா", அவள் குரல் மெலிதாக ஒலித்தது. அவன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை. "சொல்லு...சொல்லுங்க சுகன்யா" "ஒன்னுமில்லே...நீங்க பெசண்ட் நகர்லேதானே இருக்கீங்க, I mean, உங்க வீடு அங்கதானே இருக்கு" அவனுக்கு குயில் கூவியது போல் இருந்தது.  "இல்ல நான் இந்திரா நகர்ல்ல இருக்கேன்...பெசண்ட் நகர் பக்கத்துலதான்...சொல்லுங்க என்ன வேணும்?" "sorry...நான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்" அவள் தயங்கினாள். "இல்ல தொந்தரவு ஒன்னும் இல்ல...நீங்க சொல்லுங்க" "எனக்கு அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்..சென்னைக்கு வந்து...நான் அந்த கோவிலுக்கு இன்னும் போகல...எனக்கு வழி தெரியாது...அதான்", பக்கதுலேயே பீச்சும் இருக்குல்ல,அவள் இழுத்தாள். "என்ன சுகன்யா...இது ஒரு தொந்தரவா...நான் உங்களை அழைச்சுக்கிட்டு போய் காட்டறேன்...கோவிலுக்கும் போகலாம்...அப்புறம் பீச்சுக்கும் போகலாம்...ம்ம்ம்...எப்ப போகணும் உங்களுக்கு""இன்னைக்கு சாயந்திரம் போகலாமா...நான் நம்ம ஆபீசுக்கு எதிர்ல ஐந்து மணிக்கு வர்றேன்...நீங்க அங்கேருந்து என்னை கூப்பிட்டு போங்க...சரியா?" "வாங்க, நான் உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்" "தேங்க்யூ செல்வா" bye bye...

No comments:

Post a Comment