Saturday, 5 April 2014

சுகன்யா 11

சுகன்யா அன்று காலையில் தன்னை மிகவும் உற்சாகத்துடன் உணர்ந்தாள். தெருமுனை கோவிலிருந்து நாதஸ்வர இசை காற்றில் மெதுவாக மிதந்து வந்தது. அன்று ஆபீசுக்கு போகவேண்டாம் என நினைக்கும் போதே உள்ளம் இனம் தெரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவள் தன் மனதை லேசாக காற்றில் ஆடும் மயிலிறகைப் போல் உணர்ந்தாள். இன்னைக்கு எங்காவது வெளியில் போகலாமா? யார் வருவார்கள் தன்னோடு... சட்டென்று மனதில் வந்தது செல்வாதான்... செல்வாவை கூப்பிட்டால் என்ன? ஒரிரு வாரமாக அடிக்கடி அவனைப்பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் மின்னலாக வந்து போனது. அவனைப்பற்றிய எண்ணங்கள் வந்தபோதெல்லாம் சுகன்யாவின் உடலில் ஒரு மெல்லிய துடிப்பு உண்டாகி, அவள் மனம் ஒரு கிளுகிளுப்பை உணர்ந்தது. கடற்கரைக்கு போகலாமா...அங்கே போய் எவ்வளவு நாளாயிற்று?"செல்வா இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?" "நான் அவனை நினைப்பது போல் அவனும் என்னை நினைத்துப் பார்ப்பானா?" "எனக்கு அவனைப் பற்றிய சுகமான எண்ணங்கள் வருகின்றன... செல்வாவுக்கும், இதுபோல் என்னைப்பற்றிய எண்ணங்கள் வருமா?" அவள் மனம் தவித்தது. இந்த தவிப்பை அவள் உள்ளூர ரசித்தாள். வேணி சொன்னது போல் சுகன்யாவின் மனம் அவளையும் அறியாமல் காமத்தின் அர்த்தம் என்ன என்பதை சோதிக்க முடிவு செய்துவிட்டாள். ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக இருப்பதே காதல். காதல் காமத்தை ஆராயும் முதல் படிக்கட்டு. அதை செல்வா மூலம் சோதித்தால் என்ன..?செல்வா அவளுடன் ஆபீசில் வேலை செய்பவன், அவளுக்கு ஒருவருடம் முன் வேலைக்கு வந்தவன். அவளுடைய சீனியர். அவளுடைய இடப்புற கேபினில் உட்காருபவன். செல்வாவை பெரிய அழகன் என்று சொல்ல முடியாது. அவன் நிறம் கருப்புமில்லை; சிவப்புமில்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம். மாநிறத்தில் அவனை சேர்க்கலாம். சுருட்டை முடி, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான், தொப்பை இல்லாத உடம்பு, அகன்ற மார்பு, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறான் போலும், உடலை ட்ரிம்மாக, கிண்ணென்று வைத்திருந்தான். எல்லோரிடமும் பொதுவாக மெண்மையாகதான் அவன் பேசுகிறான். ஆபீசில் இருந்த பெண்களிடம் வேலைத் தொடர்பாக பேசுவானே தவிர, தேவை இல்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு ஆபீசில் இருந்த எந்த பெண்ணிடமும் ஜொள்ளு விடும் பழக்கம் அவனிடம் இல்லை. அவனின் இந்த குணம் சுகன்யாவுக்கு பிடித்து இருந்தது. ஒரு வேளை அவனின் இந்த இயல்பே, அவளை அறியாமல் அவன் பால் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆகர்ஷித்திருக்கலாம். சுகன்யாவும் தனிமை, அமைதியை விரும்புபவள். அது அவளுடைய இயல்பான சுபாவம். இருவரின் இந்த பொதுவான அம்சங்களே, மன ஒற்றுமையே, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது. அவர்கள் நேருக்கு நேர் அதிகம் பேசிக்கொள்வது இல்லை. ஆனாலும் அந்த நெருக்கம், அந்த அலுவலக நட்பு, கொஞ்ச நாளில் வேறு ஒரு புதிய பரிமாணத்தை தொட்டது. அவர்கள் மனதில், மெல்ல மெல்ல ஒரு யுவனுக்கும் ஒரு யுவதிக்கும் இடையில் உண்டாகும் மனோவியாதி, அதுதான்...காதல் எட்டிப்பார்த்தது. இருவரும் அடுத்தவர்பால் ஏற்பட்ட இந்த புதிய மன உணர்வை தங்களுக்குள் உணர்ந்த போதிலும் யார் அதை முதலில் அடுத்தவரிடம் பகிர்வது, "அவன் தான் முதலில் சொல்லட்டுமே...இல்லை அவள் தான் சொல்லட்டுமே" என்று இருவரும் ஒரு வரட்டு கௌரவத்தில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முக்கிய காரணம் வேணி. அவள் தினமும் மாலையில், அவர்கள் சந்திக்கும் வேளையில் சுகன்யாவை மாற்ற வெகுவாக முயற்சித்தாள்."சுகன்யா, நீ இங்க வந்ததுல இருந்து நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்...ஏண்டி சுகு, எப்பவும் இப்படி தனியா உன் ரூம்ல அடைஞ்சு கிடக்கிறியே, அந்த தனிமையிலே அப்படி என்னதாண்டி இருக்கு, இந்த வாலிப வயசுல தனிமையிலே சுகம் இல்லடி. உன் வயசுக்கேத்த ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில நாலு எடத்துக்கு போய் வாடி...வாழ்க்கையில ஒரு உற்சாகம் வரும். இல்லன்னா கொஞ்ச நாள் போச்சுன்னா உனக்கு பயித்தியம் தான் பிடிக்கும். "நீ சொல்லறது சரிதான் வேணி" சுகன்யா அவளை அமைதியாக அவள் சொல்வதை கேட்க்க விரும்பினாள். "சுகு, உனக்கு எதுல குறை... உனக்கு என்ன அழகு இல்லயா?...நல்லா படிச்சிருக்கே...நல்ல வேலையில இருக்க...கை நிறைய சம்பாதிக்கற...வேற என்ன வேணும்? இந்த உலத்துல நீயும் சந்தோஷமா இருக்கணும் மத்தவங்களயும் சந்தோஷமா வெச்சுக்கணும். அதுதான் நம்ம வாழ்க்கைக்கே அர்த்தம்." "வேணி என் குடும்பத்துல என் அம்மா வாழ்க்கையில ஒரு ஆணால், ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உன் கிட்ட சொல்லி இருக்கேன்", சுகன்யா தழுதழுத்தாள்."அடியே சுகன்யா, உன் அம்மாவோட வாழ்க்கையில ஒரு ஆம்பிளையினால என்ன நடந்தது அப்படின்னு நீ எங்கிட்ட சொல்லி இருக்கே, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா ஆம்பிளைகளும் கெட்டவங்க இல்லடி...அவங்களும் அன்புக்காவும், தங்க கிட்ட உண்மையான அன்பை காட்டற நல்ல பொண்ணுங்களைத் தேடிகிட்டுத்தான் இருக்காங்க". உங்க அம்மாவுக்காக நான் வருத்தப்படறேன், அதுக்காக நீ இப்படி ஆண்களை பாத்து பயப்படறது தப்புன்னுதான் நான் சொல்லுவேன்.""சுகு...என்ன, சின்ன வயசுல, பொண்ணுங்க கிட்ட எடுப்பா இருக்கற எதையும் தடவிப் பாக்கணும்ன்னு எல்லா ஆண்களுக்கும் தோணும். அதுக்காக அலைவாங்க...அவ்வளதான்... நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு மட்டும் ஸ்மார்ட்டா இருக்கற பசங்களை பாத்தா அவனை சீண்டிப்பாக்கணும் போல தோணலயா? அப்படி தோணல்லனா உன் கிட்டதான் ஏதோ தப்புன்னு அர்த்தம். அந்த அந்த வயசுல அதது நடக்கணும். துணையில்லாத வாழ்க்கையில சுகம் இல்லடி.""சுகன்யா, நீ நல்லா கேட்டுக்கோ, ஒரு பூ அப்படின்னா, அதுல கண்டிப்பா வாசனை இருந்துதான் ஆகணும். ஒரு பழம் அப்படின்னா, அதுல நிச்சயமா, இனிப்பு இருந்துதான் ஆகணும்...என்ன, சில சமயத்துல இனிப்போட கொஞ்சம் புளிப்போ இல்லன்னா துவர்ப்போ சேர்ந்து இருக்கும்...அப்படி ஆயிட்டா அது... நம்ம விதி...அதுக்காக வாழ்க்கையில பழத்தை நாம சாப்பிடாமலே இருந்துட முடியுமா...பழத்தையே ருசிக்காமல் விட்டுடறது நிச்சயமா சரியான முடிவு இல்லடி"."கடல்...அது தூரத்துல இருந்து பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கு. நம்ம எல்லோருக்குமே கடல் மேல இனம் தெரியாத ஒரு பிரியம் இருக்கு, ஒரு பிரமிப்பு இருக்கு. கிட்டப் போய் பாரு... அதனுடய பொங்கி வர அலைகள், அந்த அலைகளால் உண்டாகும் சத்தமும் ஒரு பயத்தை உண்டாக்குதா இல்லயா? ஆனா அந்த கடலே பல பேருக்கு வாழ்வாதாரமா இருக்குதானே அப்படித்தாண்டி வாழ்க்கையும்.." "கடற்கரை சுகன்யாவிற்கு மிகவும் பிடித்த இடம். எவ்வளவு நேரம் அங்கு இருந்தாலும் அவளுக்கு அலுக்காத இடம் அதுதான். "செல்வாவுடன் முதல் தரம் வெளியில் செல்ல நினைக்கிறேன்; அவனை கடற்கரைக்கு ஏன் கூப்பிடக்கூடாது?" தன் செல்லை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள்.

No comments:

Post a Comment